இந்திய தேசிய லீக் கட்சி மாநில துணைத் தலைவர் குண்டாஸில் கைது
சமூக வலைதளங்களில் மத உணர்வு, சட்ட ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் பதிவிட்ட இந்திய தேசிய லீக் கட்சி மாநில துணைத் தலைவர் முகமது சாதிக்கை 35, குண்டர் தடுப்புச் சட்டப்பிரிவில் கைது செய்து, தேனி போலீசார் சிறையில் அடைத்தனர்.
சமூக வலைதளங்களில் மத உணர்வு, சட்ட ஒழுங்கு சீர் குலைக்கும் வகையில் பதிவிடுவோரை கண்காணிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டிருந்தார். அதற்காக அமைக்கப்பட்ட குழு சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பதிவிட்ட கம்பம் சசிக்குமார், உத்தமபாளையம் ராம்செல்வா, இந்திய தேசிய லீக் கட்சி மாநில துணைத் தலைவர் கம்பம் சாதிக் ஆகியோர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
விசாரணைக்கு ஆஜாராக கோரி முகமது சாதிக்கிற்கு இரு முறை அறிவிப்பு வழங்கினர்.
ஆஜாராகாத முகமது சாதிக்கை ஜூன் 22ல் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவரை குண்டர் தடுப்பு சட்டப்பிரிவில் கைது செய்ய எஸ்.பி., சிவபிரசாத், கலெக்டர் ஷஜீவனாவிடம் பரிந்துரை செய்தார். தொடர்ந்து கலெக்டர் உத்தரவில் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.