Sunday, October 26, 2025
மாவட்ட செய்திகள்

பசுக்களுக்கு 85 சதவீத மானியத்தில் இன்சூரன்ஸ் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

‘பால் தரும் பசுக்களுக்கு 85 சதவீத மானியத்தில் இன்சூரன்ஸ் ஆவின் மூலம் செய்து தரப்படும். பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஆவினில் இணைய வேண்டும்.’ என, கம்பத்தில் நடந்த உற்பத்தியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கம்பம் நகராட்சி கூட்டரங்கில் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் கூறியதாவது:

பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், ஆவின் இடையே உள்ள இடைவெளியை குறைக்கவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. ஆவின் நிறுவனம் அரசுடையது அல்ல. இது ஒரு பெடரேஷன். பால்வளத்துறை தான் அரசுடையது.

கடந்தாண்டு ஆவினில் போனஸ், டிவிடென்ட், இன்கிரிமெண்ட் எல்லாம் கொடுத்தோம். தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மட்டும் ஆவின் நஸ்டத்தில் இயங்குகிறது. ஆவின் இருப்பதால் தான் குறைந்தபட்ச விலை பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பின் பால்விலை ரூ.6 வரை விலை அதிகரித்துள்ளோம். அரசு பொருளாதார நெருக்கடியில் உள்ளது உங்களுக்கு தெரியும். வெளி மார்க்கெட்டில் மாட்டு தீவணம் 50 கிலோ ரூ 1600. நாங்கள் ரூ.1300 க்கு தருகிறோம். அதிலும் 20 சதவீத புரோட்டின் இருக்கும். தேனி மாவட்டத்தில் 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. 63 ஆயிரம் லிட்டர் பால் ஆவினால் கொள்முதல் செய்கிறோம். நீங்கள் எல்லோரும் ஆவின் கீழ் வர வேண்டும். 9 சதவீத வட்டியில் கடன் தருகிறோம். மருத்துவ உதவிகள் செய்து தருகிறோம்.

85 சதவீத மானியத்தில் மாடுகளுக்கு ஆவின் இன்சூரன்ஸ் செய்து தருகிறது. பால் குளிரூட்டும் நிலையங்கள் ஆய்வு செய்து கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தில் தேவையான இடங்களில் அமைக்கப்படும். நானும் ஒரு விவசாயி தான். அதுதான் உங்களை அழைத்து பேசுகிறேன். தற்போதுள்ள விலை ரூ 38. நீங்கள் ரூ.40 கேட்கிறீர்கள். அரசு பொருளாதார நெருக்கடியில் இருப்பது உங்களுக்கு தெரியும். ஆலோசித்து நல்ல முடிவு எடுப்போம். நீங்கள் எல்லோரும் ஆவினில் இணைய வேண்டும்., என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற பால் உற்பத்தியாளர்கள் சுகுமாறன், அப்துல் உள்ளிட்ட பலர் பேசுகையில், ‘தனியார் லிட்டருக்கு ரூ.40 தருகிறார்கள். ஆவின் ரூ.38 தருகிறது. எங்களுக்கு ஒரு லிட்டருக்கு அந்த 2 ரூபாய் தான் கிடைக்கும். எனவே விலையை உயர்த்தி தாருங்கள். தீவன விலை அதிகரித்து விட்டது. இரவு ஒரு மணிக்கெல்லாம் பால் கறந்து விடுவோம். கம்பத்தில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும். பட்டுவாடாவை உடனுக்குடன் அதாவது வாரம் ஒரு முறையாவது கொடுத்தால் நாங்கள் ஆவினில் இணைகிறோம்.’, என்றனர். நிகழ்வில் ஆவின் பொது மேலாளர் வாணீஸ்வரி, துணை பதிவாளர் டேனியல், உத்தமபாளையம் ஆர்.டி.ஒ. தாட்சாயினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *