வைகை அணை மாந்தோப்பு ஒரு வருட குத்தகையாக ரூ.7.66 லட்சத்திற்கு ஏலம்
ஆண்டிபட்டி, டிச. 27: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை வலது கரை பூங்கா அருகில் உள்ள 136 மா மரங்களுக்கான ஒரு வருட குத்தகை ஏலம், நேற்று வலது கரை பூங்கா அலுவலகத்தில் நடந்தது. உதவி செயற்பொறியாளர் முருகேசன் அறிவுறுத்தலின்படி, உதவி பொறியாளர் பிரசாந்த் முன்னிலையில் குத்தகை ஏலம் நடத்தப்பட்டது. இதில் ரூ.3 லட்சத்திற்கான காசோலை செலுத்தி 6 நபர்கள் ஏலத்தில் பங்கு கொண்டனர்.
அரசு குத்தகை ஏல தொகையாக ரூ.6.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு நடந்த பகிரங்கமான ஏலத்தில், அதிகபட்சமாக வைகை அணையை சேர்ந்த சித்ரா ரூ.6.23 லட்சத்திற்கு ஏலம் கேட்டார். அவருக்கு வரும் 31.12.2025 வரைக்கும் அறுவடை செய்து கொள்ள பொதுப்பணித்துறை அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் 18 சதவீத ஜிஎஸ்டி வரி, மற்றும் 5% காப்பு தொகையுடன் ரூ.7.66 லட்சம் சித்ரா செலுத்தியதால், ஒரு வருடத்திற்கான குத்தகை உரிமையை பொதுப்பணித்துறையினர் வழங்கினர்.