மழையால் அணைப்பிள்ளையார் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
கேரளா, குரங்கணி, கொட்டகுடி பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து அணைப்பிள்ளையார் அணையில் நீர் அருவியாய் கொட்டி வருகிறது.
போடி பகுதியில் மழை இன்றி கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து இல்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருத்தி, மற்றும் தோட்ட பயிர்கள் பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர்.
கடந்த 4 நாட்களாக கேரளா, குரங்கணி, கொட்டகுடி பகுதியில் தொடர் கன மழை பெய்து வருகிறது. போடி, தர்மத்துப்பட்டி, சிலமலை, உள்ளிட்ட பகுதியில் மாலை, இரவு நேரங்களில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது.
குரங்கணி பகுதியில் பெய்து வரும் கன மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வர துவங்கியதை ஒட்டி போடி பங்காரு சாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன்மாய், மீனாட்சியம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களுக்கு நீர் வரத்து வந்த நிலையில் உள்ளது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போடி- மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை ஆற்றுப்பகுதியில் தடுப்பணையை தாண்டி நீர் அருவியாய் கொட்டி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளும், மக்களும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.