வரத்து குறைவால் தக்காளி கிலோ ரூ.70 ஆக உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
மாவட்டத்தில் தக்காளி வரத்து குறைவால் கிலோ ரூ.70 ஆக விலை உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் தேவாரம், டி.புதுக்கோட்டை மேட்டுப்பட்டி, மறவபட்டி, கோணாம்பட்டி, பொட்டிபுரம், சிலமலை, போடி உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் விளையும் தக்காளி மதுரை, திருச்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்புவது வழக்கம். தக்காளி இரு மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.20 முதல் 30க்கு விற்பனை செய்யப்பட்டன.
தொடர் மழையால் தற்போது வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் தரம் பிரிக்காத 17 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.400 வரை விலை போனது. தரம் பிரிக்கப்பட்ட தக்காளி ஒரு பெட்டி ரூ.450 முதல் ரூ.550 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் வாங்கினர். சில்லரை விலையில் கிலோ ரூ. 40 முதல் 50 வரை விற்பனை செய்தனர். தற்போது வரத்து குறைவு காரணமாக நேற்று முன்தினம் தரம் பிரிக்கப்பட்ட தக்காளி பெட்டி ரூ.800 வரை விலை போனது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை சில்லரையில் கிலோ ரூ.60 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்கின்றனர்.
ராஜ்குமார், விவசாயி தேவாரம், கூறுகையில், ‘ தக்காளி நடவு செய்த இரண்டு மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் செடி கருகல், நோய் தாக்கம் ஏற்பட்டு பயிர் பாதித்தது.
இதனால் வரத்து குறைந்து தற்போது தக்காளி விலை அதிகரித்து உள்ளது. தற்போது பருவமழை பெய்து வருவதால் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாத நிலையில் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.