வரட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
பெரியகுளம், : வரட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சிறுவர்கள் மகிழ்ச்சியாக குளித்து மகிழ்ந்தனர்.
பெரியகுளம் லட்சுமிபுரம் அருகே தேனி ரோட்டில் வரட்டாறு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் சொருகு மலையிலிருந்து சில தினங்களாக பெய்த மழையால் வரட்டாற்றுக்கு தண்ணீர் வரத்து இருந்தது.
இந்த ஆற்றில் ஏற்படும் நீர்வரத்து மூலம் கென்டிக்காரன்பட்டி, சக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், அழகாபுரி, அம்மாபுரம், அம்மாபட்டி, சொக்கத்தேவன் பட்டி உட்பட 20 க்கும் அதிகமான உட்கடை கிராமங்களில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நெல், வாழை, கரும்பு சாகுபடி நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நுாற்றுக்கணக்கான கிணறுகளில் நீரூற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சொக்கத்தேவன்பட்டி வழியாக வைகை அணையில் கலக்கிறது. நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ஏராளமான சிறுவர்கள், பொது மக்கள் குளித்து மகிழ்ந்தனர்.
வரட்டாற்றில் மணல் திருடிய பகுதியில் 10 அடிக்கும் அதிகமான ஆழமான பகுதியில் சிறுவர்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும். நீர்வளத்துறையினர் அப்பகுதியில் எச்சரிக்கை போர்டு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.