செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 51,483 பேர் இணைப்பு: தேனி கோட்ட தபால் கண்காணிப்பாளர் தகவல்
‘தேனி தபால் கோட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இதுவரை 51,483 பேர் இணைந்துள்ளனர்’ என, தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் என்.எம்.குமரன் தெரிவித்தார்.
தேனி கோட்ட தபால் துறையில் பெரியகுளம், போடியில் 2 தலைமை தபால் நிலையங்களும், 45 துணை தபால் நிலையங்கள், 174 கிராமப்புற கிளை தபால் நிலையங்களும், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளை ஒருங்கிணைத்து தேனி கோட்டம் இயங்குகிறது.
தபால் கோட்ட கண்காணிப்பாளரின் கீழ் தபால் நிலைய அலுவலர்கள், மேலாளர்கள், களப்பணியாளர்கள், கிராமிய தபால்துறை அலுவலர்கள் என 625 பேர் பணியில் உள்ளனர். தபால் துறை சேவைகள், நடைமுறைகள், தபால்துறை காப்பீட்டுத் திட்டங்கள், கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள், செல்வமகள் சேமிப்புத் திட்டம், மத்திய, மாநில அரசு கல்வி உதவித் தொகைகளை மாணவர்கள் எளிதாக பெறும் வசதிகள் குறித்தும், தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி’ பகுதிக்காக கோட்டக் கண்காணிபபாளர் என்.எம்.குமரன் கூறியதாவது:
போடி பாஸ்போர்ட் சேவை மைய செயல்பாடுகள் என்ன
போடி தலைமை தபால் நிலையத்தில் புதிய பாஸ்போர்ட் எடுக்கவும், புதுப்பிக்க அணுகலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் அனுமதி தேதி தெரிவிக்கப்பட்டு, நேர்காணலும் போடியிலேயே நடத்தி பாஸ்போர்ட் எளியமுறையில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். இச் சேவை மூலம் 2 ஆயிரத்திற்கு அதிகமானோர் பயனடைந்துள்ளனர். தேனி மாவட்ட மக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை இயங்குகிறது. மத்திய அரசின் விடுமுறை நாட்களில் இச்சேவை நடைபெறாது. இதற்கான முன்பதிவை அனைத்து தலைமை, துணை தபால் நிலையங்களில் செய்து பயன் பெறலாம்.
எத்தனை தபால் நிலையங்களில் ஆதார் சேவை உள்ளது
இக் கோட்டத்தில் தேனி அல்லிநகரம், பெரியகுளம், பெரியகுளம் பஜார், போடி, சுப்புராஜ்நகர், ஆண்டிபட்டி, கண்டமனுார், வீரபாண்டி, சின்னமனுார், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், கூடலுார், வடுகபட்டி, கம்பம், ராயப்பன்பட்டி, லட்சுமிபுரம், தேவதானபட்டி, சில்லமரத்துப்பட்டி, கடமலைக்குண்டு, காமயக்கவுண்டன்பட்டி, டி.சுப்புலாபுரம், சேடபட்டி, சாப்டூர், எழுமலை, உசிலம்பட்டி ஆகிய தபால் நிலையங்களில் இயங்கிறது. புதிதாக ஆதார் எடுக்க, குழந்தைகளுக்கு கைரேகைகள், கருவிழி பதிவுகளை புதுப்பிக்க இலவசம். ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி, அலைபேசி எண், பாலினம், புகைப்படம் மாற்ற ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
சில சேவை மையங்களில் அலைக்கழிக்கப் படுகிறார்களே
அவ்வாறு நடக்க வாய்ப்பு குறைவு. தவறு நடந்தால் தாராளமாக என்னிடம் புகார் அளிக்கலாம். உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி மாணவர்கள் ஆதார் பதிவுக்கு பான் கார்டு அவசியமா
இதில் பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. 5 முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கு பெற்றோர், காப்பாளர் பான் கார்டு விபரம் அளிப்பது கட்டாயம்.பிற திருத்தங்களுக்கு கட்டணத்துடன் பதிவு செய்யலாம்.
மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் சிறப்பு என்ன
அனைத்து பெண்கள், சிறுமிகள் இத்திட்டத்தில் சேரலாம். எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் துவக்கலாம். கணக்கு துவங்கி 3 மாதங்கள் ஆன பின் அடுத்த கணக்கு துவங்கலாம். முதலீட்டுக்கு 7.5 சதவீத வட்டியும், காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டியும் வழங்கப்படும். சேமிப்புப் பணத்தில் 40 சதவீதம், ஓராண்டிற்கு பின் எடுக்கும் வசதி உள்ளது. முன் முதிர்வு செய்தால் குறைக்கப்பட்ட 5.5 சதவீத வட்டி கிடைக்கும். அதில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் முதலீடும், குறைந்சபட்ச கால அளவு 2 ஆண்டுகள்.