Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு; மார்ச் 7ல் ஆய்வு

கூடலுார் ; முல்லைப் பெரியாறு அணையில் நடந்து வரும் பராமரிப்புப் பணிகளை கண்காணிப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராகேஷ் காஷ்யப் தலைமையில் மத்திய கண்காணிப்புக் குழு இருந்தது.

இது ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அணையில் நடக்க வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வந்தது. கடைசியாக 2024 ஜூன் 13ல் அணையில் ஆய்வு மேற்கொண்டது.

2022ல் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜோசப் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 12 மாதத்திற்குள் முல்லைப்பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்தது. 2024 அக்.1 முதல் முல்லைப் பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏற்கனவே பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு ஆகிய இரண்டும் கலைக்கப்பட்டது. புதிதாக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர், இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் என 7 பேர் உள்ளனர்.

மார்ச் 7ல் ஆய்வு

இக்குழு மார்ச் 7ல் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறது. மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள், நீர்க்கசிவு காலரி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு, அன்றைய தினம் மாலையில் குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்பு அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *