ஆடி வெள்ளியில் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்; கூழ் பிரசாதம் வழங்கி பரவசம்
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையில் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.கோயில்களில் கூழ் பிரசாதம் வழங்கினர்.
தேவலோகத்தில் தை முதல் ஆனி வரை பகல் பொழுதாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவு பொழுதாகவும் உள்ளது என்பது புராண நம்பிக்கை. இதன் அடிப்படையில் பகல் முடிந்து இரவு தொடங்கும் நேரமே ஆடிமாதப்பிறப்பு. இதனைத்தான் தட்சிணாயண புண்ணியகாலம் என்பர். பெண்கள் வேண்டுதல்கள் எடுத்துக் கொள்ளவும், நிறைவேற்றவும் சிறந்த மாதமாக உள்ளது. இச் சிறப்பு மிக்க ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையை பக்தர்கள் சிறப்பாக கொண்டாடினர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பெண் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பக்தர்கள் குடும்பத்தினருடன் அம்மனை வழிபட்டு மாவிளக்கு ஏற்றி, கூழ் வழங்கி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தேனி பெரியகுளம் ரோடு காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
கம்பம்: கவுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு எலுமிச்ச மாலை அணிவித்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதிகாலை முதல் பெண்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
ஆங்கூர்பாளையம் சாமாண்டியம்மன் கோயிலிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பெண்கள் தரிசனம் செய்தனர்.
உத்தமபாளையம் ஞானம்மன் கோயில், துர்கையம்மன் கோயில், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில்களிலும் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் திரண்டு வந்து அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்றனர்.
பெரியகுளம்: கவுமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வாரம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் பச்சைப்பட்டு புடவை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனம் பெற்றனர். பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.
கம்பம் ரோடு காளியம்மன் கோயில், தெற்குரதவீதி காளியம்மன், பள்ளத்து காளியம்மன், தண்டுப்பாளையம் காளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.
–போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர்.
போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் வளையல் அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை. அபிஷேகம். தீபாராதனைகள் நடந்தது.
போடி குலாலர்பாளையம் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம்,தீபாரதனைகள் நடந்தது. கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டன. போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
போடி தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம்,தீபாரதனைகள் நடந்தது. தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.
கூடலுார்:- கூடலுார் துர்க்கை அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.
வீருகண்ணம்மாள் கோயிலில் ஆடி வெள்ளி முதல் வார பூஜையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
லோயர்கேம்ப் பளியன்குடி மங்களநாயகி கண்ணகி கோயிலில் ஆடி வெள்ளி முதல் வார சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.