தேனி சுகாதார சீர்கேட்டை தடுக்க தவறியதால்;கமிஷனரை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம்
தேனி நகராட்சி முன், தொழிற்சங்க கூட்டுக்குழு இயக்கம் சார்பில், நகரில் தேங்கும் குப்பையால் ஏற்படும் சுகாதாரகேட்டை தடுக்கத் தவறிய கமிஷனர் ஜஹாங்கீர்பாஷாவை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். துாய்மைப் பணிக்கான தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்திடவும், துாய்மைப் பணியாளர்களுக்கு கலெக்டர் நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் பிச்சைமுத்து தலைமை வகித்தார்.
இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் மாவட்டத் தலைவர் நடராஜன், வனவேங்கை கட்சி மாவட்டத் தலைவர் ஏகலைவன், ஆதித்தமிழர் துாய்மைப் பணி தொழிற்சங்க பேரவை மாவட்டச செயலாளர் சென்றாயப் பெருமாள் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., பொதுச் செயலாளர் ராஜ்குமார், வனவேங்கை கட்சி நிறுவனத் தலைவர் இரணியன், சி.ஐ.டி.யு., மாவட்ட பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டத் தலைவர் பாண்டி, மாவட்ட துணைத் தலைவர் கர்ணன், மாவட்டச் செயலாளர் ஞானவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினர். சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் ஜெயபாண்டி ஒருங்கிணைத்தார். கிளைச் செயலாளர் சேர்மலை, தலைவர் மாரிச்சாமி நன்றி கூறினர். கமிஷனரை பணி மாறுதல் செய்திட கோரி கோஷம் எழுப்பினர்.