வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில் பெரியகுளம் மக்கள் 7 டன் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் முற்றிலும் அடியோடு மண்ணில் புதைந்து 380க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இந்நிலையில் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவி கரம் நீட்டும் வண்ணமாக பெரியகுளத்தை சேர்ந்த இளைஞர்கள் பெரியகுளம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் ஆடைகள், அரிசி, காய்கறிகள், பிஸ்கட், மளிகை பொருட்கள், போர்வை, துண்டு, புதிய காலணிகள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் பணத்தையும் திரட்டினர். பொதுமக்களிடம் பெற்ற நிதி, காய்கறி, அரிசி, உடைகள், காலனி உள்ளிட்ட பொருட்கள் 7 டன் அளவு சேர்ந்ததை தொடர்ந்து அவற்றை லாரியில் ஏற்றி வயநாட்டில் உள்ள அரசு அதிகாரிகளிடம் பெரியகுளம் இளைஞர்கள் வழங்கினர்.