கோலாகலமாக நடந்த சுருளி அருவி ஆதி அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம்
சுருளி அருவியில் நேற்று காலை ஆதி அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம் கருடன் வட்டமிட, திரண்டிருந்த பக்தர்களின் ஹர ஹர மகாதேவா கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது.
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது சுருளி அருவி. ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள்.
இங்குள்ள ஆதி அண்ணாமலையார் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. ஆக. 3 ல் விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஜை பூஜை, புண்யாகவாஜனம், மகா கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜைகள் நடைபெற்றது.
அன்று மாலை புண்ணிய நதிகளின் தீர்த்தம் கொண்டு வருதல், கிராம தேவதை வழிபாடு, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து ஹோமம், யாகசாலை பிரவேசம், முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மங்கள இசையுடன் சிவ சுப்ரபாத சேவை, விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், வேதிகா அர்ச்சனை செய்யப்பட்டது.
தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு செய்து, காலை 8:-40 மணியளவில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. புனித நீர் கலசங்களில் ஊற்ற துவங்கிய போது கோபுரத்திற்கு மேல் கருடன் வட்டமிட, கூடியிருந்த பக்தர்கள் கூட்டம் எழுப்பிய, ‘ஹர ஹர மகாதேவா’ கோஷம் விண்ணை முட்ட மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
கும்பாபிஷேகம் நிறைவடைந்ததும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து நடந்த அன்னதானத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கோயில் நிர்வாக அறங்காவலரும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான ரெகுபதி , மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயப் பாண்டியன், தேனி அரியநாச்சி அரிசிக்கடை உரிமையாளர் ரவீந்திரன், நகராட்சி தலைவர் வனிதா, யோகி செல்லப் பாண்டியன், சிவனடியார் முருகன் சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சிவனடியார்கள், கோயில் பாதுகாப்பு குழு, கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.