வெற்றிலை, கரும்பு சாகுபடி பரப்பு குறைந்தது! சிறப்பு திட்டம் துவக்க விவசாயிகள் கோரிக்கை
தேனி மாவட்டம் தோட்டக்கலை மாவட்டம் ஆகும். இங்கு காய்கறி பயிர்கள் பழப் பயிர்கள் அதிக பரப்பளவில் சாகுபடியாகிறது. அதேபோல் மாவட்டத்தில் வெற்றிலை, கரும்பு சின்னமனுார், பெரியகுளம் பகுதியில் மட்டும் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. வேளாண், தோட்டக்கலைத்துறை பல்வேறு பயிர்களுக்கு பல்வேறு மானியங்களையும், புதிய ரக நாற்றுகள், விதைகள், வேளாண் உபகரணங்களையும வழங்கி வருகிறது.
ஆனால் வெற்றிலை, கரும்பு பயிர்களுக்கு எந்தவித திட்டங்களும், மானியங்களும் வழங்கவில்லை. இதனால் வெற்றிலை, கரும்பு சாகுபடி பரப்பு வெகுவாக குறைய துவங்கி உள்ளது.வெற்றிலைக் கொடி வாங்க விவசாயிகள் திண்டுக்கல் சென்று வருகின்றனர்.
இதில் என்ன வேடிக்கை என்றால் இரண்டு பயிர்களிலும் ஏதாவது நோய் தாக்கினால், உரம் பூச்சி மருந்து கடைக்காரர்களிடம் சென்று அவர்களின் பரிந்துரையை கேட்டு பின்பற்றுகின்றனர். நவீன தொழில் நுட்பங்கள் குறித்த விபரங்களை வேளாண், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிவிப்பு செய்வதில்லை. வெளி மாநிலங்களுக்கு கூட இன்றைக்கும் அனுப்புகின்றனர். அதே போல் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கிய விலையில்லா கரும்பு சின்னமனுார், பெரியகுளத்தில் தான் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே குறைந்து வரும் வெற்றிலை கரும்பு சாகுபடி பரப்பை தடுத்து நிறுத்தி, சாகுபடி பரப்பை அதிகரிக்க இந்த இரண்டு பயிர்களுக்கும் சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.