வாங்க மாணவர்களே கதை எழுத பள்ளி கல்வித் துறை அழைப்பு
மாணவர்கள், ஆசிரியர்கள் கதைகள் எழுதி அனுப்பலாம் என பள்ளி கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வாசிப்பு இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை , நட, ஒடு, பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகிறது. முதல் கட்டமாக புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள் அச்சிடப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டில் 127 புத்தகங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ( 5 ம் வகுப்பிற்கு மேல் ) படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட உள்ளது. அனைத்து அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் , மாணவர்கள் கதைகளை அனுப்பலாம். வாசிப்பு இயக்கத்தால் தேர்வு செய்யப்படும் கதைகள் புத்தகங்களாக அச்சிடப்படும். இந்த புத்தகங்களுக்கு சன்மானம் வழங்கப்பட மாட்டாது. புத்தகத்தின் முகப்பில் எழுதியவர் பெயர் அச்சிடப்படும்.
நுழை பிரிவில் கதைகள் 80 முதல் 100 வார்த்தைகளுக்குள்ளும், நட பிரிவில் 150 முதல் 250 வார்த்தைகள், ஒடு பிரிவில் 300 முதல் 400 வார்த்தைகள், பற பிரிவில் 400 முதல் 500 வார்த்தைகளுக்குள்ளும் கதைகள் இருக்க வேண்டும். பள்ளி கல்வி துறையின் வெப்சைட் டில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.