எஸ்டேட்டை கைப்பற்றிய தொழிலாளர்கள்
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டப்படி சம்பளம், போனஸ், விடுமுறை சம்பளம், பஞ்சப்படி வழங்க வேண்டும்.
சனிக்கிழமைதோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய வேண்டும். ஆனால், உப்புத்தரா அருகில் அய்யர் பாறையில் உள்ள 430 ஏக்கர் ஏலத்தோட்ட உரிமையாளர் என்.எம்.ராஜு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதனால் எஸ்டேட்டை நிர்வாகம் செய்ய முடியவில்லை.
இரண்டு ஆண்டுகளாக போனஸ், சம்பளம் இதர படிகள் வழங்கவில்லை. ஒவ்வொரு தொழிலாளருக்கும், 70,000 ரூபாய் வரை பாக்கி உள்ளது. பல முறை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேசியும் பயனில்லை.
இதனால் வேறு வழியில்லாததால் எஸ்டேட்டை கைப்பற்றிய தொழிலாளர்கள், 325 பேரும் நிலங்களை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு விவசாயம் செய்ய துவங்கி விட்டனர்.
இது தொடர்பாக, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறுகையில், ‘தொழிலாளர்களுக்கு, 6 கோடி ரூபாய் வரை சம்பளம் மற்றும் போனஸ் தர வேண்டி உள்ளது.
அவற்றை வழங்கினால் தான் தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறுவர். இல்லையெனில், சொந்தமாக விவசாயம் செய்து வாழ்க்கை நடத்துவர்’ என்றார்.
கேரளாவில் தோட்ட தொழிலாளர்கள் சம்பள நிலுவைக்காக எஸ்டேட்டை கைப்பற்றியது இதுவே முதன்முறை.