பெரியாறு அணையில் நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்: நீர் இருப்பு குறைவால் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல்
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 119.85 அடியாக குறைந்துள்ள நிலையில், கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீர் திறப்பை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி உள்ளது. முதல் போக நெல் சாகுபடி தண்ணீர் பற்றாக்குறையின்றி நிறைவுக்கு வந்தது. அறுவடை நடக்கும் போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக நாற்றாங்கால் அமைத்து வளர்க்கத் துவங்கி விட்டனர்.
தற்போது இரண்டாம் போகத்திற்கான நடவு பணிகள் ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து பகுதிகளிலும் முடிவடைந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 119.85 அடியாக உள்ளது. நீர்ப் பிடிப்பில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையாததால் நீர்மட்டம் உயர்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தற்போதுள்ள நீர் இருப்பு இரண்டாம் போகத்திற்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. அணையின் நீர்மட்டம் அதிகமாக இருக்கும் போது தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த நீரின் அளவை குறைக்க விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் நீர்வளத்துறையினர் பல நாட்கள் அதிகபட்சமாக வினாடிக்கு ஆயிரம் கன அடிக்கு மேல் நீரை திறந்தனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மீண்டும் கனமழை பெய்து அணையின் நீர்மட்டம் 130 அடிக்கு மேல் உயர்ந்தால் மட்டுமே இரண்டாம் போக சாகுபடியை முழுமையாக செய்ய முடியும்.
அதுவரை தமிழக பகுதிக்கு நீர் திறப்பின் அளவை 500 கன அடியாக குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி, தலைவர், கூடலுார் நீரினை பயன்படுத்துவோர் சங்கம்: பெரியாறு அணையில் நீர்மட்டம் 120 அடிக்கும் கீழ் உள்ளதால் இரண்டாம் போக நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடியாது. செப்., அக்டோபரில் நீர்மட்டம் 130 அடியை எட்டியிருந்த நிலையில் தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு 1555 கன அடியாக இருந்தது.
அந்த நேரத்தில் நீர் திறப்பை குறைத்து இரண்டாம் போக சாகுபடிக்காக நீர் இருப்பை உறுதி செய்ய விவசாய சங்கம் நீர்வளத் துறையினருக்கு பலமுறை தகவல் கொடுத்தோம். ஆனால் மழை பெய்து நீர்மட்டம் உயர்ந்து விடும் எனக் கூறி நீர் திறப்பை குறைக்கவில்லை. இதனால் தற்போது நீர்மட்டம் குறைந்து இரண்டாம் போகசாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டு விட்டது.