குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா நிறைவு
குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடிப் பெருந்திருவிழா நேற்று நிறைவடைந்தது.
தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வரர் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இக் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும்.
கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதால் இந்தாண்டு திருவிழாவை ரத்து செய்வதாக அறநிலையத்துறை அறிவித்தது.
இந்த முடிவை எதிர்த்து கம்பம் முத்துக் குமரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். கொடியேற்றம், சுவாமி புறப்பாட்டை தவிர்த்து வழக்கம் போல திருவிழா நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஜூலை 20 ல் திருவிழா துவங்கியது. ஜூலை 27, ஆக., 3 என மூன்று சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெற்றது. மூன்றாவது வாரம் பெருந்திருவிழாவாகும். ஆடிப் பெருந்திருவிழாவின் கடைசி வாரத் திருவிழா நேற்று நடந்தது.
மூன்று சனிக்கிழமைகளிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சுரபி நதியில் குளித்து விட்டு விநாயகரை வணங்கி, பின் காக்கை வாகனம் வாங்கி வைத்தல், எள் தீபமேற்றுதல் என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
ஆனால் கொடியேற்றம், திருக்கல்யாணம், முளைப்பாரி ஊர்வலம், சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.