வயநாடு சம்பவத்தால் சுற்றுலா வருவதை தவிர்க்கும் கேரள மக்கள்
வயநாடு நிலச்சரிவு கண்ட கேரள மக்கள் மூணாறு உள்பட மலை பகுதிகளுக்கு சுற்றுலா வருவதற்கு அஞ்சி தவிர்த்து வருகின்றனர்.
கேரளாவில் ஜூலை 15க்கு பிறகு தென் மேற்கு பருவ மழை வலுவடைந்த நிலையில் மாத இறுதியில் கொட்டித் தீர்த்தது. வயநாட்டில் ஜூலை 30ல் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு மாநிலத்தை உலுக்கியது.
அதனையடுத்து சுற்றுலா பகுதிகளுக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலாதுறை, மின்வாரியம் ஆகியோர் சார்பிலான சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டன. சுற்றுலா பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும் மாவட்டத்தில் பயணிகள் வருகை குறைந்தது.
வயநாடு சம்பவத்தை கண்ட கேரள மக்கள் மூணாறு உள்பட மலை பகுதிகளுக்கு சுற்றுலா வருவதற்கு அஞ்சி தவிர்த்து வருகின்றனர். மூணாறில் தமிழக சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக வருகை தந்த பயணிகள் எவ்வித இடையூறுகள் இன்றி சுற்றுலா பயணிகளை நிதானமாக ரசித்து திரும்பினர் என்பது குறிப்பிடதக்கது.