பீட்ரூட் விளைச்சலும், விலையும் திருப்தி: விவசாயிகள் மகிழ்ச்சி
பீட்ரூட் விளைச்சலும், விலையும் ஒரு சேர திருப்தியாக இருப்பதால் சாகுபடியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தேனி மாவட்டம் தோட்டக் கலை மாவட்டமாகும். காய்கறிகள், வாழை, திராட்சை, தென்னை, மா உள்ளிட்ட பழ வகைகள் அதிக பரப்பில் சாகுபடியாகின்றன.
வாழை, காய்கறிகள் தினமும் கொச்சி, தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காய்கறிகள், வாழை, திராட்சை பழங்களின் விலையும் உச்சத்தில் உள்ளது.
இதனால் தோட்டக்கலை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பாக ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி, ஓடைப்பட்டி, கூடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்கறி பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. ராயப்பன்பட்டியில் தற்போது பீட்ரூட் சாகுபடி செய்து அறுவடை செய்யப்படுகிறது.
மார்க்கெட்டில் கிலோ ரூ.30 வரை விற்பனை ஆகிறது. இதற்கு முன் கிலோ ரூ.10 முதல் 15 வரை விற்ற பீட்ரூட் தற்போது கிலோ ரூ.30 விற்பனை ஆகிறது.
மேலும் விளைச்சலும் ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை கிடைக்கிறது. விலையும் விளைச்சலும் இருப்பதால் பீட்ரூட் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.