Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

இரண்டாம் திருமணம் செய்த மனைவியை வெட்டிய கணவர் கைது

ஆண்டிபட்டி : இரண்டாவது திருமணம் செய்த மனைவி தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் கௌரி 25, இவருக்கும் வருஷநாடு அம்பேத்கர் நகரை சேர்ந்த ஈஸ்வரன் 36, என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கௌரி ஓராண்டுக்கு முன்பு சரவணன் என்பவரை 2வது திருமணம் முடித்து அவருடன் திருப்பூரில் வசித்து வந்தார். ஒரு வாரத்திற்கு முன் கௌரியும் சரவணனும் ஜெயமங்கலம் வந்து தங்கி இருந்தனர்.

அப்போது சரவணன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கெளரி சிகிச்சை சேர்த்துள்ளார். மன உளைச்சலில் இருந்த கௌரியும் மருத்துவமனையில் இருந்த போது தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதால் சிகிச்சைக்காக வார்டு 403 ல் இருந்தார். அப்போது கௌரியின் முதல் கணவர் ஈஸ்வரன் மருத்துவமனைக்கு வந்து தன்னுடன் வாழவருமாறு கௌரியை அழைத்துள்ளார். கௌரி மறுத்ததால் கோபமடைந்த ஈஸ்வரன் கௌரியை அசிங்கமாக பேசி மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார்.

இதில் இடது வலது கைகளில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் ஈஸ்வரனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். க. விலக்கு போலீசார் அரிவாளால் மனைவியை வெட்டிய கணவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *