அரசு இயக்குது ‘குளியல் பஸ்’; கூரைத் தாரையில் வேர்வை நீங்குது
தேனியில் இருந்து சின்னமனுாருக்கு இயக்கப்பட்ட பஸ்சின் கூரை வழியாக மழைநீர் முழுவதும் பஸ்சிற்குள் வடிந்ததால், பயணிகள் சொட்டச் சொட்ட நனைந்தவாறு பயணம் செய்தனர். அரசு ‘குளியல் பஸ்’ இயக்குகிறதோ என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் 7 அரசு பஸ் டெப்போக்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றை பராமரிக்க போதிய பணியாளர்கள் இல்லை. கிராமப் பகுதிகளுக்கு சில வழித்தடங்களில் மட்டும் புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல வழித்தடங்களில் பழைய பஸ்கள் தான் இயக்கப்படுகின்றன. இவை கூரை, ஜன்னல் சேதமடைந்த நிலையில் இயக்கப்படுகின்றன.
நேற்று மாலை 6:00 மணிக்கு TN58 N 1972 என்ற பதிவு எண் கொண்ட டவுன் பஸ் தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து உப்பார்பட்டி வழியாக சின்னமனுார் சென்றது. இதில் 9 பெண் பயணிகள் உட்பட 20 பேர் பயணித்தனர். பஸ் புறப்பட்ட போது மழை பெய்ய துவங்கியது. கனமழையாக பெய்தது. சேதமடைந்த கூரை வழியாக மழைநீர் பஸ்சின் உட்பகுதியில் ‘சோ…’ வென விழுந்து கொண்டே இருந்தது. இதனால் பயணிகள் இருக்கையில் அமராமல் நின்றபடி நனைந்தவாறு பயணித்தனர். அருவியில் குளிக்கும் அனுபவம் போல் இருப்பதாக கூறிய பயணிகள், அரசு ‘குளியல் பஸ்’ இயக்குகிறதோ என கிண்டலடித்தனர்.