Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

சட்டக்கல்லுாரி அருகே குப்பைக்கிடங்கு; மாவட்ட நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தேனி அரசு சட்டக் கல்லுாரி அருகே உள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தேனி ராசிங்காபுரம் வழக்கறிஞர் மகேந்திரன் தாக்கல் செய்த பொது நல மனு: தேனியில் அரசு சட்டக் கல்லுாரி சுற்றுச்சுவர் அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அருகே கலைக் கல்லுாரி, ஐ.டி.ஐ., உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. குப்பைக் கிடங்கால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபடுகிறது. அதிலிருந்து வெளியேறும் பூச்சிகள் கல்லுாரிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கலெக்டர், நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: குப்பைக் கிடக்கு அமைக்க மாற்று இடம் இல்லை. இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதிகள்: குப்பைக் கிடங்கு அமைந்துள்ள பகுதி, அதற்கும் சட்டக் கல்லுாரிக்கும் இடையே எவ்வளவு துாரம் உள்ளது என்பதை தேனி மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும்.

அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில், சட்டக்கல்வி இயக்குனர், அம்பேத்கர் சட்டப் பல்கலை பதிவாளரை இந்நீதிமன்றம் தானாக முன் வந்து எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்கிறது.

அவர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை செப்.,9 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *