விபத்து அபாயத்தில் கிளை நுாலக கட்டடம்; ஆமைவேக வராகநதி பாலப்பணி சிரமத்தில் தவிக்கும் பெரியகுளம் மேல்மங்கலம் ஊராட்சி மக்கள்
ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார மருத்துவமனையாக தர உயர்த்த வேண்டும், மேல் மூடி அமைக்காத கிணறால் விபத்து அபாயம், அடிக்கடி கொசுக்கடியால் அவதி, இடிந்து விழும் அபாயத்தில் கிளை நுாலக கட்டடம், ஆமை வேகத்தில் நடக்கும் வராக நதி பால பணிகளால் விவசாயிகள், பொதுமக்கள் சிரமம் என நாள்தோறும் பெரியகுளம் ஒன்றியம் மேல்மங்கலம் ஊராட்சி மக்கள் சிரமத்தில் தவிக்கின்றனர்.
இவ்வூராட்சியில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
நான்கு அக்ரஹார தெருக்கள், அம்மாபட்டி, கீழக்கு, மேற்குத் தெருக்கள், சவுராஷ்டிரா தெரு உட்பட பல தெருக்கள் உள்ளன. மேல்மங்கலம் ஊராட்சியில் பல பகுதிகளில் சாக்கடை, ரோடு, சுகாதார வளாகம், தெரு விளக்கு உட்பட அடிப்படை வசதிகள் முழுமைப் பெறாமல் உள்ளது.
இதனால் மக்கள் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். கொசு மருந்து தெளிப்பது இல்லை. ஊராட்சி அலுவலகம் அருகே கிளை நூலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
முத்தையா கோயில் முதல் உப்பியப்பன் கோயில் வரை 3.5 கி.மீ., துாரம் மெட்டல் ரோடும், வெள்ளக்கரடு முனியாண்டி கோயில் முதல் அழகர்நாயக்கன்பட்டி நாராயணன்குளம் வரை 6 கி.மீ., தார் ரோடு அமைக்கும் பணி திட்டம் கிடப்பில் உள்ளது.
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிருப்தியில் உள்ளனர். முதல் வார்டு பிள்ளைமார் தெருவில் பயன்பாடு இன்றி திறந்த வெளி கிணறு உள்ளது.
உயரம் குறைவான இந்த கிணற்றை சிறுவர்கள் எட்டிப் பார்த்தால் தவறி விழும் அபாயம் உள்ளது. திறந்தவெளி கிணற்றிற்கு இரும்பு வளைவில் மேல்மூடி அமைக்க இந்த வார்டு பகுதி மக்கள் பலமுறை கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
தரம் உயர்த்துங்கள்
முத்துசெல்வி, மேல்மங்கலம்: மேல்மங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மேல்மங்கலம், வடுகபட்டி, சேடப்பட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, ராஜேந்திரபுரம் உட்பட ஏராளமான உட்கடை கிராமங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகின்றனர்.
‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு’ என்ற சொல்லாடலுக்கு ஏற்ப இங்கு சிகிச்சைக்கும் வரும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை மட்டும் வழங்கப்படுகிறது.
தேவையான சிகிச்சைக்கு ஊசி செலுத்துவது இல்லை. இதனால் இந்தப் பகுதி மக்கள் 6 கி.மீ., தொலைவில் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும், 20 கி.மீ., தொலைவில் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது.
தற்போது டாக்டர் இல்லை. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
ஆமை வேகப் பாலப்பணி
லட்சுமணன், விவசாயி, மேல்மங்கலம்: மேல்மங்கலம் வராகநதியின் மறுபுறம் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் பாலம் அமைக்க தனிநபர் 400 அடி நீளம் உள்ள நிலத்தை பாதைக்காக ஊராட்சிக்கு வழங்கினார். இதனை தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நபார்டு வங்கி திட்டத்தின் மூலம் ரூ.4.54 கோடிக்கு 60 மீட்டர் நீளம் பாலம், தெற்கு, வடக்காக 50 மீட்டர் நீளம் அணுகுசாலை அமைக்கும் திட்டப்பணி துவங்கியது. பின் ஓராண்டாகியும் பணி முடியவில்லை.
ஆமை வேகத்தில் நடக்கிறது. விரைவுபடுத்த வேண்டும்.
இப்பணிகளை விரைந்து முடிக்காததால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு காலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
கொ சுக் கடியால் அவதி
நாகராஜ், மேல்மங்கலம்: வார்டுகளில் துாய்மைப்பணி மந்த கதியில் நடப்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி துாங்குவதற்கு சிரமமாக உள்ளது.
சுடுகாடுகளில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. ஜெயமங்கலம் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு வருவதில்லை. அக்ரஹாரம் தெருக்களில் சிமென்ட் ரோடு அமைக்காமல் இருப்பதால் சிரமம் உள்ளது.
ரூ.1.50 கோடி வளர்ச்சிப் பணிகள்
நாகராஜன், ஊராட்சித் தலைவர் மேல்மங்கலம்: மேல்மங்கலம் பஜனைமடம் அருகே ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைத்தல், கிழக்கு முத்தையா கோயில் ரோட்டில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைத்தல், ‘பேவர் பிளாக்’ கற்கள் பதிப்பு உட்பட பல்வேறு பணிகள் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
ஜெயமங்கலத்தில் நடந்த, ‘மக்களின் முதல்வர்’ முகாமில் ரோடுகள் அமைக்க வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.’, என்றார்.-