பொறுப்பு சார்-பதிவாளர்களுக்கு கிடுக்கி போடுகிறது பதிவுத்துறை
விதிகளை மீறும் பொறுப்பு சார்-பதிவாளர்களுடன், அவர்களை நியமித்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க, பதிவுத்துறை தயாராகி வருகிறது.
தமிழகத்தில், 587 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. அவற்றில், சட்டப்படி முழுநேர சார்-பதிவாளர்கள் மட்டுமே பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும். சார்-பதிவாளர்கள் விடுப்பு, இடமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் காலியிடம் ஏற்பட்டால், உதவியாளர்கள் பொறுப்பு சார்-பதிவாளர்களாக நியமிக்கப்படுவர்.
இது, தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், தற்போதைய நிலவரப்படி, 200க்கும் மேற்பட்ட இடங்களில், பொறுப்பு சார்-பதிவாளர்களாக உதவியாளர்களே தொடர்ந்து பல ஆண்டுகளாக செயல்படுகின்றனர்.
இந்த இடங்களில் முழுநேர சார்-பதிவாளரை நியமிக்காமல் இருப்பதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் உடந்தையாக உள்ளனர். இதனால், பதிவுத்துறை தலைவர் நினைத்தாலும், இந்த இடங்களில், முழுநேர சார்-பதிவாளர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொறுப்பு சார்-பதிவாளர்கள் சட்ட வழிமுறைகளில் தெளிவும், போதிய அனுபவமும் இன்றி செயல்படுவதால், பல இடங்களில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
தணிக்கை அறிக்கைகளில், இவர்கள் மீது குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டாலும், மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் இவர்களை காப்பாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்காலிக ஏற்பாடு அடிப்படையிலேயே, பொறுப்பு சார்-பதிவாளர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் நபர்கள், உரிய பணி அனுபவம், தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.
தகுதி இல்லாத நபர்களை பொறுப்பு சார்-பதிவாளர்களாக நியமித்தால், அவர்களால் வருவாய் இழப்பு, பிற பாதிப்புகள் வரும் நிலையில், அவர்களை நியமித்த மேலதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தகுதி இல்லாத பொறுப்பு சார்-பதிவாளர்களை, தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் மேலதிகாரிகள் மீது, இனி நடவடிக்கை பாயும்.
இவ்வாறு அவர் கூறினார்.