மாதவிடாய் விடுமுறை அமல்படுத்த வலியுறுத்தல்
‘கேரளா, ஒடிசா, பீஹார் மாநிலங்களில் அமலில் உள்ளது போல் தமிழகத்தில் பணிக்கு செல்லும் மகளிர், அரசு பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக்கு மாதந்தோறும் மாதவிடாய் விடுப்பு வழங்கிட வேண்டும்’ என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் அன்பழகன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
மகளிருக்கு அதிகாரம் அளிக்கும்விதமாக பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதை வரவேற்கிறோம். கேரளா, பீஹார், ஒடிசா மாநிலங்களில் பணியாற்றும் அரசு பெண் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் சிரமம் இன்றி பணியாற்றும் சூழல் அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகள், அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் நாட்களில் விடுப்பு அளிக்க வேண்டும். இதனால் மகளிர் உடல் நலமும், மன நலனும் பாதுகாக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.