Thursday, May 8, 2025
தமிழக செய்திகள்

துறைமுகம், கல்பாக்கத்தில் போர்க்கால ஒத்திகை கடற்படை, விமான படையினர் பங்கேற்பு

சென்னை துறைமுகம் வளாகத்தில், நேற்று நடந்த போர் ஒத்திகை நிகழ்வில், பாதுகாப்பு படை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

500 பேர் பங்கேற்பு

ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் முக்கிய நகரங்களில் போர் ஒத்திகையும் நடந்து வருகிறது.

குறிப்பாக, அணு மின் நிலையங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், ராணுவ முகாம்கள், துறைமுகங்களில், பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல் திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்யும் நோக்கில், ஒத்திகை நடத்தப்படுகிறது.

சென்னை துறைமுகத்தில், நேற்று மாலை 4:00 முதல் 5:00 மணி வரை, விமான தாக்குதல் மாதிரியான சூழ்நிலையை உருவாக்கி, பல்வேறு குடிமக்கள் மற்றும் பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்புடன், போர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

ஒரே நேரத்தில், திடீரென விமான தாக்குதல் நடப்பதை உருவாக்கி, துறைமுகத்தில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுவது, மீட்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.

சென்னை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல் படை, இந்திய விமானப் படை, தமிழக போலீஸ், தேசிய பேரிடர் மீட்புப் படை, எண்ணெய் நிறுவனங்கள், சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் துறைமுக பயனாளர்கள் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

நடந்தது என்ன?

சென்னை துறைமுகம் வளாகத்தில், நேற்று மாலை, 4:00 மணிக்கு விமான தாக்குதலை சித்தரிக்கும் எச்சரிக்கை, ‘சைரன்’ ஒலிக்கப்பட்டது. சைரன் ஒலிக்கப்பட்டதும், துறைமுகத்தின் அவசரநிலை நடவடிக்கை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதில், மத்திய மற்றும் மாநில அரசுகள், குடிமக்கள் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து, துறைமுகத்தின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டது.

கடலோர காவல் படை, உடனடியாக இரண்டு கப்பல்களை இயக்கி, கடல் வழியாகத் தாக்குதல் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மத்திய மற்றும் மாநில அரசு பாதுகாப்பு அமைப்புகள், உடனடியாக எச்சரிக்கையுடன் செயலில் ஈடுபடுத்தப்பட்டன.

விமான தாக்குதல் சூழ்நிலையில், ஒரு தொட்டி பகுதி தீக்கிரையாகும் நிலை உருவாக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், சென்னை துறைமுக தற்காப்பு மற்றும் தீயணைப்பு வீரர்கள், மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள் ஒருங்கிணைந்து தீயை அணைத்தன.

பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம், காணாமல் போனவர்களை தேடுதல், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், துறைமுக ஆம்புலன்ஸ்கள் வாயிலாக துறைமுக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த போர் ஒத்திகை நிகழ்வின் நிறைவில், சென்னை துறைமுக சபை தலைவர் சுனில் பாலிவால் தலைமையில் விளக்க கூட்டம் நடந்தது.

இதில், சென்னை துறைமுக துணைத் தலைவர் விஸ்வநாதன், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் பூங்கா நகர் போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவடிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

விளக்கம்

இதேபோல, கல்பாக்கம் அணுமின்நிலையத்திலும், நேற்று மாலை, 4:00 மணிக்கு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

இதில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா உட்பட மத்திய தொழில் பாதுகாப்பு படை, இராணுவம், கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு, கலால் உள்ளிட்ட அனைத்து அரசு துறையினர் பங்கேற்றனர்.

ஒத்திகையில் கடல்வழி, வான்வழி, தரைவழி தாக்குதல்களை தடுப்பது, அணுமின் நிலைய கட்டமைப்புகளை, எதிரிகளின் கண்ணில் படாமல் தொழில்நுட்பம் வாயிலாக மறைப்பது, உடனடியாக மின் உற்பத்தியை நிறுத்துவது, லேசர் கண்காணிப்பு, மோப்பநாய் சோதனை, ரசாயன குண்டுகள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும், அணுக்கசிவு ஏற்பட்டால், அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களை மீட்டு எவ்வாறு பாதுகாப்பது என்ற ஒத்திகையும் நடந்தது.

தொடர்ந்து, இ.சி.ஆர்., வெங்கப்பாக்கம் கூட்டுச்சாலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், எவ்வாறு பாதுகாப்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

அப்போது, ஒருவருக்கு முதலுதவி அளித்து பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *