தீபாவளிக்கு முன் பதிவில்லா ரயில்களை இயக்க வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க முன்பதிவில்லா ரயில்களை இயக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், புதுச்சேரி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல உள்ளனர். ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் நிலை காணப்படுகிறது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கூட சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிவடைந்து விட்டது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக்கழகம் இயக்குகிறது. இதற்காக இரு நகரங்களுக்கு இடையே வழக்கமாக செல்லும் பஸ்கள் குறைக்கப்பட்டு, சிறப்பு பஸ்களாக நீண்டதுாரங்களுக்கு செல்கின்றன. இதனால் அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கு செல்ல பஸ் பற்றாக்குறை ஏற்படுகிறது. உதாரணமாக செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் சென்னை – மதுரைக்கு மாற்றப்படுகின்றன. இதனால் செங்கோட்டை – மதுரை பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு மாற்று ஏற்பாடாக ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் இயங்கும் அனைத்து ரயில்களையும் கூடுதல் சேவையாக, அக். 29 இரவு முதல் நவ. 4 வரை தொடர்ந்து இயக்கினால் சிரமமின்றி மக்கள் பயணிக்க முடியும்.
மதுரை- – போடி, மதுரை- -செங்கோட்டை, மயிலாடுதுறை- – செங்கோட்டை, மதுரை– ராமேஸ்வரம், மதுரை- -கோவை, திருச்சி– காரைக்குடி, விருதுநகர்- -காரைக்குடி, செங்கோட்டை- -ஈரோடு, கோவை–நாகர்கோயில், திருநெல்வேலி- -செங்கோட்டை , காட்பாடி –விழுப்புரம், திருச்சி- -பாலக்காடு போன்ற ரயில்கள் சென்றடையும் இடங்களில் பல மணி நேரம் யார்டில் நிறுத்தப்படுகின்றன. இவற்றை மறு மார்க்கத்தில் கூடுதல் சேவையாக முன்பதிவில்லா ரயிலாக ஒரு டிரிப் வந்து செல்லும் வகையில் இயக்கினால் பெரும் வரவேற்பு கிடைக்கும். ரயில்வேக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
நாகர்கோவில்- -தாம்பரம் வழித்தடத்தில் இயங்கும் அந்தியோதயா ரயில்களை கூடுதலாக ஒரு டிரிப் மதுரை வரை இயக்கினாலே சென்னை, டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் வந்து செல்ல முடியும்.
இதற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.