Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

ஊராட்சிகளில் காட்சிப்பொருளாக மாறிய உர தயாரிப்பு கூடங்கள்

மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள உரம் தயாரிப்பு கூடங்கள் பயன்பாடின்றி முடங்கியுள்ளது.

தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் துாய்மை இந்தியா திட்டத்தின் குப்பையை மக்கும், மக்காதவை என தரம் பிரித்து அதில் மக்கும் குப்பையை உரம் தயாரிக்கும் வகையில் உரக்கூடங்கள் அமைக்கப்பட்டன. ஊராட்சிகள் சார்பில் உர தயாரிப்பு கூடங்கள் அமைக்கப்பட்ட சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்தன. பின் இந்த கூடங்கள் பயன்பாடின்றி முடங்கின. ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பையை அப்பகுதிகளில் உள்ள கண்மாய்கள், நீரோடைகள், ரோட்டோரங்களில் கொட்டுவதும் அவற்றை தீ வைத்து எரிப்பதும் தொடர்கிறது.

குப்பையை பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. ஊராட்சிகளில் உள்ள குறைந்தளவு துாய்மை பணியாளர்களால் இத்திட்டத்தை செயல்படுத்த இயலாத நிலை உள்ளது. இதனால் பல கிராமங்கள் திரும்பும் திசையெங்கும் குப்பையாக காட்சியளிக்கும் நிலை உள்ளது.

ஒவ்வொரு ஊராட்சியிலும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான துாய்மை பணியாளர்களை நியமித்து தரம்பிரித்து மறுசுழற்சி செய்ய ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *