வனப்பகுதியில் கோயில் விழா நடத்துவதில் சிக்கல் – வனத்துறையினருடன் எம்.பி., தங்கதமிழ்்செல்வன் ஆலோசனை
சுருளியாறு வனப்பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் விழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் எம்.பி., தங்க தமிழ்செல்வன் சைக்கிள் பயணமாக கோயிலுக்கு சென்று வனத்துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தேனி மாவட்டம் கூடலுார் அருகே சுருளியாறு வனப்பகுதியில் 35 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையம் உள்ளது. இப்பகுதியில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தர்கள் சென்று வந்தனர். மேலும் ஆண்டுதோறும் சித்திரையில் நடக்கும் விழாவிற்காக குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, கூடலுார், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகம் செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகக் கூறி பொது மக்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை (ஏப்.22), நாளை மறுநாள் சித்திரை திருவிழா கொண்டாட வேண்டிய நிலையில் வனத்துறையின் தடையால் பக்தர்கள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து எம்.பி., தங்க தமிழ்செல்வனிடம் விழா நடத்த அனுமதி பெற்றுத் தரக்கோரி மனு வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை எம்.பி., சைக்கிள் பயணமாக சுருளியாறு முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கு வனத்துறையினரிடம் கட்டுப்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். வனத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி விழா நடத்த அனுமதி பெற்றுத் தருவதாக கிராம மக்களிடம் எம்.பி., தெரிவித்தார்.