ஆன்லைன் முதலீட்டிற்கு அதிக லாபம் பெண்ணிடம் ரூ.54.37 லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த பீரவீணா 24, என்பவரிடம் ரூ.54.37 லட்சம் மோசடி குறித்து தேனி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் பிரவீணா 24. வீட்டில் இருந்தபடியே போட்டித்தேர்வுக்கு படித்து வருகிறார். பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் கொண்ட அவர் அது தொடர்பான ஏ.க்யூ.ஆர். இன்னோவேஷன் என்ற நிறுவன வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்தார். பங்குச்சந்தை முதலீட்டிற்கு அதிக லாபம் கொடுப்பதாகவும், ‘செபி’யில் அனுமதி பெற்றிருப்பதாகவும், முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனவும் கூறினர்.
அதை நம்பி பிரவீணா இணைந்தார். 2024 ஜூன் 3 முதல் ஜூலை 24 வரை 9 தவணைகளாக ரூ.54 லட்சத்து 37 ஆயிரத்து 700 ரூபாயை ஆன்லைனில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கூறியபடி லாபத்தொகை கிடைக்காததால் சந்தேகம் அடைந்தார். விசாரித்தபோது அது மோசடி நிறுவனம் என தெரியவந்துள்ளது. தேனி சைபர் கிரைம் போலீசில் பீரவீணா புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விசாரிக்கிறார்.