ஊராட்சி தலைவர் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
இடமலைகுடி ஊராட்சி தலைவர் ஈஸ்வரியின் வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியது.
மூணாறு அருகே இடமலைகுடியில் அடர்ந்த வனத்தினுள் மலைவாழ் மக்கள் 24 குடிகளில் (கிராமம்) வசிக்கின்றனர்.
அப்பகுதி மலைவாழ் மக்களுக்கு தனி ஊராட்சியாக உருவாக்கப்பட்டு 2010 முதல் இடமலை குடி ஊராட்சி என செயல்பட்டு வருகிறது.
அந்த ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக ஆண் காட்டு யானை நடமாடி வருகிறது.
கண்டத்திகுடியில் கடந்த வாரம் சிவன், ராமன் ஆகியோரின் வீடுகளை சேதப்படுத்தியது.
அந்த யானை நேற்று முன் தினம் அதிகாலை 1:00 மணிக்கு ஷெட்டுகுடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அங்கு வசிக்கும் இடமலை குடி ஊராட்சி தலைவர் ஈஸ்வரியின் வீட்டை சேதப்படுத்தியது.
அப்போது வீட்டில் ஈஸ்வரி, அவரது கணவர் ராஜன் ஆகியோர் மட்டும் இருந்தனர்.
சப்தம் கேட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். மலைவாழ் மக்கள் பலத்த கூச்சலிட்டு யானையை விரட்டினர்.