நிலச்சரிவு அபாயம் : வெளியேற 23 குடும்பங்களுக்கு நோட்டீஸ்
தேவிகுளத்தில் இறைச்சல்பாறை பகுதியில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால், அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு 23 குடும்பங்களுக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்தனர்.
மூணாறு அருகே தேவிகுளத்தில் இறைச்சல்பாறையில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி பகுதியில் ஜூலை 30ல் மண் சரிவு ஏற்பட்டது.
அதே பகுதியில் மலை மீது நீண்ட விரிசல் ஏற்பட்டது. அதனால் நிலம் சற்று தாழ்ந்து நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
விரிசல் ஏற்பட்ட பகுதியின் கீழ் குடியிருப்புகள் ஏராளம் உள்ளன. அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் வசிப்பதால், அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு 23 குடும்பங்களுக்கு கே.டி.எச்., வி.ஏ.ஓ., நோட்டீஸ் அளித்தார்.
அப்பகுதியை விட்டு சிலர் வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்த நிலையில் பெரும்பாலானோர் வெளியேறவில்லை.
அவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வரும் நிலையில், தேவிகுளத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு எஞ்சியவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.