அடிப்படை வசதி இன்றி சுற்றுலா பயணிகள் அவதி
மூணாறு: மூணாறு நகரில் அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் அவதியுற்று வருகின்றனர்.
சுற்றுலா நகரான மூணாறில் அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் குடிநீர், கழிப்பறை, நடைபாதை, தெருவிளக்கு, பஸ் ஸ்டாண்ட் மற்றும் உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனை உள்பட எவ்வித வசதிகளும் இல்லை. அவற்றை தொலை நோக்கு சிந்தனையுடன் செயல்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் முன்வருவதில்லை. அதனால் மூணாறு நகர் ஆரம்ப கால கட்டமைப்புடன் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் உள்பட பல்வேறு பாதிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மூணாறில் பஸ் ஸ்டாண்ட் இருந்தும் இல்லாத நிலை உள்ளது. பழைய மூணாறில் ஊராட்சி ஒன்றியம் சார்பிலான பஸ் ஸ்டாண்ட் பல ஆண்டுகளாக லாரிகள் நிறுத்தும் இடமாகவும், ஊராட்சி சார்பிலான பஸ் ஸ்டாண்ட் கட்டண அடிப்படையில் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் செயல்பட்டு வருகிறது.
அதனால் மூணாறு நகரில் தபால் அலுவலகம் ஜங்ஷனில் எவ்வித வசதிகளும் இன்றி ஆட்டோ ஸ்டாண்ட்டில் திறந்த வெளியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது.