அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.8 லட்சம் மோசடி ஒப்பந்ததாரர் உட்பட இருவர் மீது வழக்கு
தேனி:மதுரை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி தேனி மாவட்டம் கம்பம் சுருளிபட்டியை சேர்ந்த ஆனந்தபிரபு என்பவரிடம் ரூ.13.8 லட்சம் பெற்று போலி பணி ஆணை வழங்கிய ஒப்பந்ததாரர் சசிக்குமார், அருண்யா மீது போலீசார் மோசடி வழக்குப் பதிந்துள்ளனர்.
கம்பத்தை சேர்ந்த அருண்யா 35. இவரும் மதுரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தப்பணி செய்யும் கம்பம் சசிக்குமாரும் நண்பர்கள்.
இவர்கள் இணைந்து ஆனந்தபிரபுவிடம் தேசியநெடுஞ்சாலைத் துறை மதுரை அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறினர். இதை நம்பிய ஆனந்தபிரபுஅருண்யாவின் வங்கிக்கணக்கிலும், சசிக்குமாரிடமும் ரூ.13 லட்சத்து 8 ஆயிரத்து 550 தந்தார்.
பணத்தை பெற்ற சசிக்குமார், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் பணி ஆணையை என்ற ஒன்றை ஆனந்தபிரபுவிடம் வழங்கினர். அது போலியானது என தெரிந்தது.
இது குறித்து ஆனந்தபிரபு, தேனி எஸ்.பி.,சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., யாழிசைசெல்வன் ஆகியோர் அருண்யா, ஒப்பந்ததாரர் சசிக்குமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.