தாட்கோ மூலம் ரூ.18.53 கோடி கடனுதவி தேனி மாவட்ட மேலாளர் தகவல்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பொருளாதரத்தை மேம்படுத்த சுயதொழில் துவங்குதல், நிலம் வாங்குதல் உள்ளிட்டவற்றிற்கு கடந்த நிதியாண்டில் ரூ.18.53 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட தாட்கோ மேலாளர் சரளா தெரிவித்தார்.
தாட்கோ நிறுவன சேவை பற்றி..
ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டங்களை செயல்படுத்துதல் தாட்கோ நிறுவனத்தின் முதன்மை பணி ஆகும். திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உரியவர்களுக்கு திட்டங்களில் பயனடைவடை உறுதி செய்தல், அந்த சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி திட்டங்களில் அவர்களை பங்கேற்க செய்து அவர்களை தொழில் முனைவோர் ஆக்குதல், பெண்களை தொழில் முனைவோராக ஊக்குவித்து பொருளாதார நிலை உயர்விற்கு உதவுவது தாட்கோ மாவட்ட மேலாளரின் பணி ஆகும்.
தாட்கோவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றிதாட்கோ மூலம் தொழில் முனைவு திட்டத்தில் மானியத்தில் கடனுதவி, சுயஉதவிகுழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், மகளிர் நில உரிமைத்திட்டம், மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள், துாய்மை பணியாளர் நல வாரியத்தின் மூலம் அவர்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்குதல், கல்வி கடன் வழங்கப்படுகிறது.
தொழில் முனைவு திட்டம் பற்றிஇந்த திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த 18 வயது முதல் 55 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆட்டோ ரிக் ஷா வாங்குதல், மளிகை கடை வைத்தல், டிஜிட்டல் பிரிண்டிங், பர்னிச்சர் கடை, டூரிஸ்ட் வாகனங்கள் வாங்குதல், வெல்டிங் பட்டறை, சூப்பர் மார்க்கெட், தையலகம், ரெடிமேட் கார்மெண்ட், பேன்சி ஸ்டோர், பாத்திரக்கடை, பால்பண்ணை, கறவைமாடு, ஆடு, கோழி வளர்ப்பு, பியூட்டி பார்லர், பேக்கரி, ஸ்டூடியோ,மூக்கு கண்ணாடி கடை, மருந்து கடை, ரத்தபரிசோதனை நிலையம் உள்ளிட்ட தொழில்கள் துவங்க மானிய கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் தொழிலின் திட்ட தொகையில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.50லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். வட்டி மானியம் 6 சதவீதம் வழங்கப்படும்.
சுயஉதவி குழுக்களுக்கான கடன் திட்டம் என்ன
ஒரு குழுவிற்கு 12 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அவர்கள் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மகளிர் திட்டத்தில் பதிவு செய்த குழுவாக இருக்க வேண்டும். இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் குடும்ப ஆண்டு வருமானம், ரூ.3லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். சுய உதவி குழுக்களுக்கு திட்ட தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.6லட்சம் மானியமாக வழங்கப்படும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி விபரம்
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ சார்பில் அழகு கலை பயிற்சி, ட்ரோன் இயக்குதல், சட்டபடிப்பு, மருத்துவம், பொறியியல்,அரசு பணிகளுக்கான நுழைவுத்தேர்வு பயிற்சி, ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங், மருத்துவ முதலுதவி, ஆங்கில பேச்சாற்றல், மருத்துவ உதவியாளர், வாகன ஓட்டுநர் பயிற்சி உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
நிலம் வாங்குதல் திட்டத்தில் பயன் அடைந்துள்ளனரா
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். நிலத்தை விற்பனை செய்பவர் பிற சமூகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி விலை நிர்ணயிக்கப்படும். முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில விலக்கு அளிக்கப்படும்.