ஓட்டுச்சாவடி மறுவரையறை பணிகள் துவங்குகிறது!
ஓட்டுச்சாவடி மறுவரையறை பணிகள் துவங்குகிறது! அரசியல் கட்சியினருடன் ஆலோசிக்க முடிவு
மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகள் மறுவரையறைப் பணிகள் துவங்க உள்ளன. இதில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் மறுவரையறை பற்றி அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் புதிய ஓட்டுச்சாவடிகள் அமைய வாய்ப்புள்ளது.
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் என 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 231 இடங்களில் 1225 ஓட்டுச் சாவடிகள் அமைந்துள்ளன. வாக்காளர்கள் ஆண்கள் 5.47 லட்சம், பெண்கள் 5.71 லட்சம், மற்றவர்கள் 195 பேர் என மொத்தம் 11.18 லட்சம் பேர் உள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல், தொடர்ந்து 2026ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளன.
தற்போது வாக்காளர்கள் சுருக்கத் திருத்த பணிகள் நடந்து வருகின்றன. இதனுடன் ஓட்டுச்சாவடி மறு வரையறை பணிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக தாலுகா வாரியாக, ஆண்டிபட்டி கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், பெரியகுளம் தாலுகா ஆர்.டி.ஓ., முத்துமாதவன், போடி மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, உத்தமபாளையம் தாலுகா ஆர்.டி.ஓ., தாட்சாயணி நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு 2 கி.மீ., துாரத்திற்கு மேல் இருந்தால், 1500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் அந்த பகுதியில் புதிய ஓட்டுசாவடி அமைத்தல், ஆபத்தான இடங்களை கடந்து வர வேண்டி இருந்தால் புதிய ஓட்டுச்சாவடி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேதமடைந்த ஓட்டுசாவடிகளை மாற்றவும் கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தி உள்ளார். இதனால் மாவட்டத்தில் சில இடங்களில் புதிதாக ஓட்டுச் சாவடிகள் அமைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே 13 ஓட்டுச்சாவடிகளில் 300 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஓட்டுச்சாவடிகள் வரையறை தொடர்பாக அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி ஆலோசிக்க உள்ளதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.