இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல் நிறுத்திவைப்பு
மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக துணை தாசில்தார் பதவியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் தற்போது பணிபுரியும் துணை தாசில்தார்கள் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக சான்றிதழ்கள் உள்ளிட்டவை, விரைவாக கிடைக்காமல் பொது மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
தேனி மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. வருவாய்த்துறை இரு கோட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இவற்றின் அடிப்படையில் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் ஆகிய தாலுகாக்கள் செயல்படுகின்றன.
பொது மக்களுக்கு தேவையான ஜாதி சான்றிதழ், வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள், நில ஆவணங்கள் பராமரிக்கப்படுகின்றன.
இதுதவிர தேர்தல் பணிகள், ரேஷன்கார்டு வழங்குதல், சமூக பாதுகாப்புத் திட்டங்கள், சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் தாசில்தார்கள் பணியிடத்திற்கு அடுத்தபடியாக தலைமையிடத்து துணை தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார்கள், தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள், வட்டார வழங்கல் அலுவலர்கள், கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் நிலையில் நியமிக்கப்படுகின்றனர். தற்போது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 38 பணியிடங்களில் சுமார் 11க்கும் மேற்பட்ட துணை தாசில்தார் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது உள்ள துணை தாசில்தார்கள் பதவி உயர்வு பெற்று சென்றால், காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிக்கும்.
துணைதாசில்தார் பணியிடத்திற்கு முதுநிலை பட்டியல் தயாரிப்பில் ஏற்பட்ட நிர்வாக சிக்கலால் இரு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் மட்டும் இந்நிலை உள்ளது.
இதனால் தற்போது பணிபுரியும் துணை தாசில்தார்கள் வழக்கமான பணியை விட, கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. பொது மக்களும் உரிய நேரத்தில் சான்றிதழ்கள், நில அளவை பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.