Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

253 சிலைகள் முல்லையாற்றில் கரைப்பு

மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்; 253 சிலைகள் முல்லையாற்றில் கரைப்பு

தேனி, கம்பம், போடி, கூடலுார் பகுதிகளில் ஹிந்து எழுச்சி முன்னணி, ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

நேற்று தேனி பொம்மையக் கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோயிலில் செண்டை மேளம் முழங்க நுாற்றுக்கணககான பெண்கள் முளைப்பாரியுடன் 94 விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. விழாவில் தேனி வேதபுரீ ஆஸ்ரம சித்பவாநந்தா ஆசியுரை ஆற்றினார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சோலைராஜன் வரவேற்றார். நிறுவனத் தலைவர் பென்.ரவி தேனி நகரத் தலைவர் செல்லபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாவட்டத் தலைவர் ராமராஜ்,நிர்வாகிகள் ராமமூர்த்தி, செந்தில்குமார், ராஜேஸ்குமார், முத்துராஜ், சிவராமன் பங்கேற்றனர். துணைச் செயலாளர் சக்திவேல் நன்றி தெரிவித்தார்.

ஊர்வலம் அல்லிநகரம், பழைய பஸ் ஸ்டாண்ட், பங்களாமேடு வழியாக அரண்மனைப்புதுாரில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தை வழிநெடுகிலும் உள்ள பொது மக்கள் விநாயகர் திருமேனிகளை வணங்கிச் சென்றனர். தேனி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

கம்பம்: ஹிந்து முன்னணி மற்றும் எழுச்சி முன்னணி சார்பில் நேற்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் 63 விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கியது.

அரசமரத்திலிருந்து புறப்பட்ட சிலைகள் பஸ்ஸ்டாண்ட் ரோடு, டாக்கி ஸ்டாண்ட் ரோடு, பெண்கள் மேல்நிலைப் பள்ளி வீதி, பார்க் ரோடு, நகராட்சி வீதி வழியாக சென்று சிலைகள் முல்லை பெரியாற்றில் கரைக்கப்பட்டது.

அதே போல் அரசு கள்ளர் பள்ளி அருகில் இருந்து ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் 15 சிலைகள் அதன் நிர்வாகி மாயலோகநாதன் தலைமையில் கிளம்பி காமயகவுண்டன்பட்டி ரோட்டில் முல்லைப் பெரியாற்றில் கரைக்கபபட்டது. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

உத்தமபாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 26 விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

ஞானம்மன் கோயில் ஆர்ச் அருகில் ஆரம்பித்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.

ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், ஹிந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூடலுார்: விநாயகர் சதுர்த்தி விழா ஹிந்து முன்னணி சார்பில் நடந்தது. புது பஸ் ஸ்டாண்ட், கன்னிகாளிபுரம், பெட்ரோல் பங்க், எம்.ஜி.ஆர்., காலனி, அண்ணாநகர், அரசமரம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட 47 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

அனைத்து சிலைகளும் டிராக்டர் மூலம் வைக்கப்பட்டு எல்.எப்., ரோடு, மெயின் பஜார், ரத வீதி, காமாட்சி அம்மன் கோயில் தெரு வழியாக ஊர்வலமாக சென்று முல்லைப் பெரியாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.

போடி: போடி நகர் ஒன்றியம் சார்பில் நேற்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. புதூர் சங்கர விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. குலாலர்பாளையம் விநாயகர் கோயில், போடி அணைப்பிள்ளையார் கோயில், சந்தைப்பேட்டை விநாயகர் கோயில், அக்ரஹாரம் விநாயகர், அமராவதி நகர் விநாயகர், கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் உள்ள விநாயகர், போடி பஸ் ஸ்டாண்ட் அருகே இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டு இருந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போடி பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியர் தலைமையில் நடந்தது.

பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டியன், ஹிந்து முன்னணி தெற்கு மாவட்ட தலைவர் சுந்தர், மாவட்ட பொதுச் செயலாளர் கணேஷ்குமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, நகர செயலாளர் சந்திரசேகர், ஆர்.எஸ்.எஸ்., நகர செயலாளர் பாலசுப்பிரமணி, நகர பொதுச் செயலாளர் மணிகண்டன் முன்னிலையில் நகர, ஒன்றிய நிர்வாகிகள் 55 சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கொட்டக்குடி ஆற்றில் கரைத்தனர். ஹிந்து முன்னணி, பா.ஜ., நகர ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *