மீண்டும் படையப்பா
இரு மாதங்களுக்கு பின் மீண்டும் படையப்பா
‘ என் வழி தனி வழி’ என்ற பாணியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு தனது வழித்தடத்திற்கு வந்த படையப்பா, காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தியது.
மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம்.
பிற யானைகளைப் போன்று அல்லாமல் படையப்பா தனக்கென சில குறிப்பிட்ட பகுதிகளில் ‘ என் வழி தனி வழி’ என்ற பாணியில் சுற்றி வரும்.
குறிப்பாக மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் சட்ட மூணாறு வரையிலும், டாப் ஸ்டேஷன் ரோட்டில் மாட்டுபட்டி, குண்டளை, அருவிக்காடு, செண்டுவாரை ஆகிய பகுதிகள், மூணாறு அருகே கல்லார் எஸ்டேட் பகுதி வரை என படையப்பாவின் வழித்தடமாகும்.
கடந்த இரண்டு மாதங்களாக டாப் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் வலம் வந்த படையப்பா நேற்று முன்தினம் மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரிய வாரை எஸ்டேட் பகுதிக்கு வந்தது.
அங்கு குருசடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு ரோட்டில் நடமாடிய படையப்பாவை வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டினர்.
நள்ளிரவு 1:00 மணிக்கு கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனுக்குச் சென்ற படையப்பா முனியாண்டிராஜ், கலை செல்வன், சரவணன், மாடத்தி, சொள்ளமாடன் ஆகியோரின் பீன்ஸ், கீரை ஆகிய தோட்டங்களை சேதப்படுத்தியது.
தோட்டங்களை விட்டு அதிகாலை 4:00 மணிக்கு சென்றது. அதே பகுதியில் தேயிலை தோட்ட எண் 4ல் நேற்று பகல் முழுவதும் முகாமிட்டது.