Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

கணக்கெடுப்பு விவசாயத்திற்கான இலவச மின்இணைப்பு குறித்து உண்மைத் தன்மை அறிய வேளாண் துறை ஆய்வு

விவசாய இலவச மின் இணைப்புகளின் உண்மைத் தன்மையை அறிய மின் இணைப்பு விபரங்களை வேளாண் துறையினர் ஆய்வு செய்யும் பணியை துவங்கியுள்ளனர்.

தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு பெற்றவர்களில் பெரும்பாலோர், அனுமதிக்கப்பட்ட திறனுக்கு அதிகமாக கன்டென்சர்களை பயன்படுத்தி கூடுதல் மின்சாரம் உபயோகப்படுத்துகின்றனர். சிலர் இலவச விவசாய மின் இணைப்பு என பெற்று வர்த்தகம், தொழிற்சாலை போன்றவற்றிற்கும் சட்டவிரோதமாக பயன்படுத்தவதாக புகார் எழுந்தது.

 

அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விவசாய மின் இணைப்புகளை நேரடியாக கள ஆய்வு செய்து, உண்மையிலேயே விவசாய பணிகளுக்கு மின் இணைப்பு பயன்படுகிறதா அல்லது வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா என அறிய மின் இணைப்பு எண், விவசாயி பெயர், சாகுபடி பயிர், பரப்பளவு உள்ளிட்ட பல்வேறு விபரங்களை வழங்குமாறு வேளாண் துறைக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் அதிக மின்சாரத்தை, இலவச மின் இணைப்புகள் பயன்படுத்துவதால், அரசு அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள உத்தரவிட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு வட்டாரத்திலும் வேளாண் உதவி இயக்குநர் தலைமையில் வேளாண் அலுவலர் , உதவி வேளாண் அலுவலர்கள் அடங்கிய குழு இந்த பணியை துவக்கி உள்ளனர்.

இது குறித்து வேளாண் துறையினர் கூறுகையில், இலவச மின் இணைப்புகளின் உண்மைத் தன்மை அறிய கள ஆய்வில் இறங்கி உள்ளோம். இலவச மின்சாரத்திற்கு வேளாண் துறை சார்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலுத்துகிறது. எனவ இலவச மின்சாரம் உண்மையில் விவசாயத்திற்கு பயன்படுகிறதா என்பதை கண்டறிந்து அறிக்கை தர அரசு கேட்டுள்ளது. ஒரு சில நாட்களில் அரசிற்கு அறிக்கை வழங்கப்பட உள்ளது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *