கிருஷ்ண ஜெயந்தி விழா பொங்கல் வைத்து வழிபாடு
கம்பத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஊர்வலமாக சென்று கம்பராயப்பெருமாள் கோயிலில் பொங்கல் வைத்து கருடாழ்வார் வாகனத்தை அழைத்து வந்தனர்.
கம்பம் நவநீதகிருஷ்ண மடாலயத்தில் உள்ள வேணு கோபாலகிருஷ்ணன் கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
நேற்று முன்தினம் மாலை பெண்கள் நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக சென்று, கம்பராயப்பெருமாள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் கருடாழ்வார் வாகனத்தை மேளதாளத்துடன் வேணுகோபால கிருஷ்ணன் கோயிலிற்கு அழைத்து வந்தனர். நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கருடாழ்வார் வாகனத்தில் வேணுகோபாலகிருஷ்ணன் வீதி உலா வந்தார். வீதிகளில் நெடுகிலும் திரளான பெண்களும், ஆண்களும் திரண்டு நின்று தரிசனம் செய்தனர்.
இதேபோன்று நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழுவில் திரளாக பெண்கள் பொங்கல் வைத்து, பட்டத்து காளையை வழிபட்டனர்.
பட்டத்து காளைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காமுகுல ஒக்கலிக கவுடர் சமுதாயத்தின் சார்பின் விழா சிறப்பாக நடைபெற்றது.