Wednesday, April 16, 2025
தமிழக செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: இடத்தை இறுதி செய்த விஜய்

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கட்சியைத் தொடங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அப்போதே நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கொடி, கொள்கைகள் வெளியிடப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தற்போது கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் , த.வெ.க. கட்சி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

 

இதனைத்தொடர்ந்து கடந்த 22-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.இதற்காக பனையூரில் உள்ள அலுவலகத்தில் சுமார் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நடப்பட்டது.

திட்டமிட்டபடி அன்றைய தினம் விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த கொடியில், இரட்டை போர் யானை நடுவில் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்றிருந்தன.

விஜய் கட்சி மாநாடு

கட்சிக் கொடி வெளியீட்டிற்குப் பிறகு அனைவரது பார்வையும் விஜய் கட்சியின் மாநாடு மீது தான் இருந்து வந்தது.

திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெற்று வந்தநிலையில், த.வெ.க., தலைமையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. திருமாலை நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் அடுத்த மாதம் 23ம் தேதி கட்சி மாநாடு நடத்த அனுமதிக்குமாறு மனு அளித்துள்ளனர்.எஸ்.பி. அலுவலகத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளிக்க உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளநிலையில், அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாடு குறித்த விவரங்களை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் என்று கூறினார்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *