கஞ்சா தோட்டத்தை அழித்துவிட்டு திரும்பிய போலீசாரை துரத்திய யானை அணைப்பகுதிக்குள் சென்று தப்பினர்
தேனிமாவட்டம் மேகமலையில் பயிரிட்டிருந்த கஞ்சா தோட்டத்தை அழித்து விட்டு திரும்பும் போது போலீஸ் குழுவினரை ஒற்றை யானை துரத்தியதால் ஹைவேவிஸ் அணைப்பகுதிக்குள் சென்று தப்பித்தனர்.
மேகமலையில் ஏலத்தோட்டத்திற்குள் கஞ்சா சாகுபடி செய்திருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்து போலீசிற்கு தெரிவித்தனர். சின்னமனூர் எஸ்.ஐ. சுல்தான் பாட்சா தலைமையிலான போலீஸ் குழுவினர் நேற்று முன்தினம் கஞ்சா செடிகளை அழிக்க மலைப்பகுதியில் நடந்து சென்ற போது கனமழை, மேக மூட்டம் என கடும் சவால்களை சந்தித்தனர்.
ஒரு வழியாக ஹைவேவிஸ் அணையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருந்த குழிக்காடு என்ற இடத்தில் தோட்டம்போல் பயிரிட்டு நன்கு வளர்ந்திருந்த 60 செடிகளை வெட்டி தீ வைத்து எரித்து அழித்தனர்.
அதன்பின் திரும்பி வரும் போது ஒற்றை யானை போலீஸ் குழுவை நோக்கி வந்துள்ளது. போலீசார் சமயோஜிதமாக செயல்பட்டு வனப்பகுதியில் இருந்து ஹைவேவிஸ் அணைப்பகுதிக்குள் சென்று தப்பினர். அணையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளதால் யானை திரும்பி சென்றுள்ளது.
நால்வர் கைது
இதனிடையே அங்கு கஞ்சா பயிரிட்டது தொடர்பாக சின்னமனூர் அருகே உள்ள கரிச்சி பட்டியை சேர்ந்த கருப்பசாமி 47, முருகன் 51, மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மணி 42, கேரளா நெடுங்கண்டத்தை சேர்ந்த மேத்யூ ஜோசப் 58, ஆகிய நால்வரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.