பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்ததால் வலியுறுத்தல் : 18ம் கால் வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் லோயர்கேம்ப் 18ம் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் 47 கி.மீ., தூரம் கொண்டதாகும். பெரியாறு அணையில் நீர் இருப்பை பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தண்ணீர் திறப்பது வழக்கம். இக்கால்வாய் மூலம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள 55 கண்மாய்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து 30 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயன்பெறும். மேலும் உத்தமபாளையம், போடி வட்டாரங்களில் 6839 ஏக்கர் நேரடி பாசனம் உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் நீர் இருப்பு போதிய அளவு இருந்த போதிலும் அரசு உத்தரவு கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் டிச.19ல் திறக்கப்பட்டது.
திறந்து ஒரு வாரத்தில் தலைமதகுப் பகுதி மற்றும் தொட்டி பாலம் அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டது. அதன்பின் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. முழுமையாக கண்மாய்கள் நிரம்பாமல் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டியுள்ளது. இதனால் 18ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப் படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
நீர் திறப்பிற்கு முன் கால்வாயில் பல்வேறு பகுதிகளில் உள்ள உடைப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
முன்கூட்டியே சீரமைப்பு பணியை முடித்திருந்தால் தண்ணீர் திறக்கும் போது கரை உடையும் அபாயம் இருக்காது.