அயிரை மீன் விலை; எகிறியது : கிலோ மதுரையில் ரூ.2500, போடியில் ரூ.2200
போடி : ‘தேனி மாவட்டம் போடி கொட்டகுடி ஆற்றுப்பகுதியில் அயிரை மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அம்மீன்கள் கிலோ ரூ.2200க்கு விற்பனையானது. மதுரையில் கிலோ ரூ.2500 வரை விற்பனையானது,’ என, வியாபாரிகள் தெரிவித்தனர்
தேனி மாவட்டத்தில் முல்லை மற்றும் கொட்டகுடி ஆற்றுப்பகுதிகளில் நவ., முதல் ஜன., வரை அயிரை மீன் சீசன். ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் போது அயிரை மீன்கள் அதிகளவில் கிடைக்கும். அந்த காலத்தில் வலை விரித்து மீன்களை பிடிப்பது வழக்கம். நீர்வரத்து குறைந்து வரும் நிலையில் தனி ஒருவராக இல்லாமல், வியாபாரிகள் ஒன்று சேர்ந்து ஆற்று பகுதியில் பல மணி நேரம் காத்திருந்து அயிரை மீன்களை பிடிக்கின்றனர்.
தற்போது கேரளா, குரங்கணி பகுதியில் பெரிய அளவில் மழை இல்லாததால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அயிரை மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது நிலவும் பனி, சீதோஷ்ண கால நிலை மாற்றத்தால் பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் பாதிப்பு அடைந்துள்ளனர். சளி, இருமலுக்கு அயிரை மீன் குழம்பு சிறந்த மருந்து என்பதால் பலரும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாகவும், வரத்து குறைவாலும் தேனி மாவட்டம் போடியில் தற்போது அயிரை மீன்கள் கிலோ ரூ.2000 முதல் ரூ.2200 வரை விற்பனையானது. இதற்கு முன் கிலோ ரூ.1600 வரை விற்றது.அயிரை மீன் வியாபாரிகள் கூறியதாவது: 15 ஆண்டுகளுக்கு முன் வரை நண்டு, அயிரை மீன்கள் ஆறு, வயல் வெளியில் அதிகமாக கிடைத்தன. தற்போது வயல் வெளிகளில் களைக்கொல்லி மருந்தும், மாந்தோப்புப்பகுதியில் மருந்துக
களும் தெளிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் வயல் ஓரங்களில் முல்லை ஆறும், மாந்தோப்புகள் ஓரத்தில் கொட்டகுடி ஆற்றின் கரையோரங்களும் அமைந்துள்ளன. மருந்து தெளிப்பதன் மூலம் உயிரினங்கள் அழிவதால் அயிரை மீன்கள் உற்பத்தியும் குறைந்துள்ளது.
மழையின்றி நீர்வரத்தும் குறைந்துள்ளதால் உற்பத்தியும் இல்லை. இதனால் விலை உயர்ந்துள்ளது என்றனர்.