பெண் மண்டை ஓடு கைப்பற்றி போலீஸ் விசாரணை
பெரியகுளம் அருகே காட்டுப்பகுதியில் கிடந்த பெண்ணின் மண்டை ஓட்டை போலீசார் கைப்பற்றி கொலையா, தற்கொலையா என விசாரிக்கின்றனர்.
பெரியகுளம் அருகே மேல்மங்கலம் ஒத்தவீடு ரோட்டிலிருந்து வைகை புதூர் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. இதில் முன்னதாக 2 கி.மீ., தூரத்திற்கு ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதி.
இங்கு ஆடு மேய்ப்பவர்கள் நேற்று மனித மண்டை ஓட்டினை கண்டனர். இது பற்றி ஜெயமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
டி.எஸ்.பி., நல்லு, தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்லா, தடய அறிவியல் ஆய்வக நிபுணர்கள் மண்டை ஓட்டினை கைப்பற்றினர்.
அப் பகுதியில் சோதனையிட்டபோது 3 சிறிய எலும்பு துண்டுகள், சேலை,பெண்கள் அணியும் ஒரு ஜோடி செருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் கூறுகையில்: இந்த மனித மண்டை ஓடு சேதமடையவில்லை. இறந்து ஒரு மாதத்திற்குள்ளாகலாம்.
முதல் கட்டமாக தேனி மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் குழுவினர் ஆய்வுக்கு மண்டை ஓடு உட்படுத்தப்படும்.
மருத்துவ அறிக்கைக்கு பிறகு சென்னை தடய அறிவியல் ஆய்வகம் மிகைப்படுத்துதல் பகுதியில் இந்த மண்டை ஓட்டினை வழங்கினால் சோதனைக்கு உட்படுத்தி 3 முதல் 4 மணி நேரத்தில் மண்டை ஓட்டுக்கு பொருத்தமான நபர்களின் முகம், தலைமுடியுடன் 3டி படம் கிடைக்கும். இதனை வைத்து சமீபத்தில் காணாமல் போனவர்கள் படத்துடன், இதனை ஒப்பிட்டு கண்டுபிடிப்போம்.
இறந்தவர் பெண் என தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்டாரா, தற்கொலையா,கற்பழித்து கொலையா என விசாரணைக்கு பின் தெரியவரும் என்றனர்.
ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.