சீரமைப்பு முழுமை பெறாததால் இடையூறு
மூணாறு – உடுமலைபேட்டை ரோட்டில் சீரமைப்பு முழுமை பெறாததால் இடையூறு
மூணாறு – உடுமலைபேட்டை ரோட்டில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுமையாக நடக்காததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை மே 30ல் துவங்கியது. இம்மாதம் இறுதியுடன் பருவ மழை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கடந்த மூன்று மாதங்களில் அவ்வப்போது மழை வலுவடைந்து பலத்த மழை பெய்தது.
அதனால் மூணாறு பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டன. குறிப்பாக ஜூலை இறுதியில் பெய்த மழையில், மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டன.
வாகனங்கள் கடந்து செல்லும் அளவு மட்டும் மண் நீக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
பல பகுதிகளில் மண் முழுமையாக நீக்கப்படவில்லை. குறிப்பாக மூணாறு அருகே எட்டாம் மைல் பகுதியில் இரண்டு இடங்களில் மண் மற்றும் பாறை ஆகியவை அகற்றப்படவில்லை.
அப்பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுமையாக நடக்காததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. தவிர கேரளாவில் ஓணம் பண்டிகை செப்.15ல் கொண்டாடப்படுகின்றது.
அந்த விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் வாகன நெரிசல் கடுமையாக ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதனை தவிர்க்கும் வகையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுமையாக செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.