சதுர்த்தி ஊர்வலத்தில் கல்வீச்சு: ஒருவர் காயம் சிலைகளை தெருவில் நிறுத்தி போராட்டம்
கடமலைக்குண்டு அருகே நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கல் வீச்சில் ஒருவர் காயமடைந்தார்.
கடமலைக்குண்டு சுற்றியுள்ள கிராம பகுதியில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அனைத்து சிலைகளையும் நேற்று வைகை ஆற்றில் கரைப்பதற்கான ஏற்பாடுகளை ஹிந்து அமைப்பினர் செய்திருந்தனர்.
கடமலைக்குண்டு அருகே வனத்தாய்புரம் என்னும் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையையும் கரைக்க மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கிராமத்தில் உள்ள மாற்று மதத்திற்கு மாறிய ஒருவர் அவர் வசிக்கும் தெரு வழியாக விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்று தடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கும் தடுத்த நபரின் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஊர்வலத்தை தடுத்த நபர் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றவர்கள் மீது கல் வீசியதில் முருகன் என்பவர் காயமடைந்தார். இதனை தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கல்வீச்சில் காயம் அடைந்த முருகன் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஊர்வலத்தை தடுத்து பிரச்னை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஹிந்து அமைப்பினர் விநாயகர் சிலையை தெருவில் நிறுத்தி போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் போராட்டத்தை கைவிட்டு சிலையை ஆற்றில் கரைக்க மீண்டும் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.