மக்களுடன் முதல்வர் முகாமில் 24,245 மனுக்கள் உரிமைத்தொகை கோரி 8 ஆயிரம் பேர்
மாவட்டத்தில் ஊராட்சிகளில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் 24,245 மனுக்கள் வழங்கினர். இதில் 8 பேர் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் ஜூலை 11 முதல் ஆக., 20 வரை 20 நாட்களில் 31 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. இந்த முகாமில் மின்வாரியம், கூட்டுறவு, ஊரக வளர்ச்சித்துறை, போலீசார், மாற்றுத்திறனாளிகள்நலத்துறை, வீட்டு வசதி வாரியம், தொழிலாளர் நலன், வேளாண் உள்ளிட்ட 15 துறைகள் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24,245 மனுக்கள் வழங்கினர்.
இந்த மனுக்கள் துறைகள் சார்ந்த மனுக்கள், துறைகள் சாராத மனுக்கள் என பிரிக்கப்பட்டன. முகாமில் பங்கேற்ற 15 துறைகளுக்கு பட்டா மாறுதல் கோரி 3ஆயிரம் மனுக்கள், அரசு காப்பீடு, முதியோர்ஓய்வூதியம், ரேஷன் பெயர் மாற்றம், தொழிலாளர் நலன், வாரிசு சான்றிதழ், வங்கி கடன் உட்பட 8045 மனுக்கள் வழங்கப்பட்டது. இதில் 775 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுவரை 5700 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் 1600 மனுக்களுக்கு தீர்வுகாண உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போல் துறைகள் சாரா மனுக்களாக மகளிர் உரிமைத்தொகை கோரி 8ஆயிரம் மனுக்கள், புதிய குடும்ப அட்டை, ரோடு, குடிநீர் வசதி, பிரதமரின் விவசாயிகள் கவுரவத்தொகை திட்டத்தில் சேர்க்க கோரி என 16,200 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 980 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.