மூல வைகை ஆற்றில் குளித்து மகிழும் பொது மக்கள்
கடமலைக்குண்டு: கண்டமனுார் பெரிய பாலம் அருகே மூல வைகை ஆற்றில் வரும் நீரில் பொது மக்கள் குளித்து மகிழ்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு மலைப் பகுதியில் கடந்த சில வாரங்களில் பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்கிறது. வெள்ளிமலை, மேகமலை, வாலிப்பாறை, முறுக்கோடை, வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு உட்பட பல கிராமங்களை கடந்து வரும் மூல வைகை ஆற்றில் வரும் நீர் கண்டமனுார் பெரிய பாலம் அருகே தடுப்பணையில் தேங்கி இப்பகுதியில் நிரம்பி வழிகிறது.
தற்போது இரவில் பனி, பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் கண்டமனுார், சுற்று கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பெரிய பாலம் அருகே ஆற்றின் நீரில் குளித்து மகிழ்கின்றனர். கண்டமனுார்- தேனி ரோட்டில் வாகனங்களில் செல்பவர்கள் பலரும் இப்பகுதியில் வரும் தெளிந்த நீரில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.